ரவை அதிரசம்
தேவையான பொருட்கள் :
ரவை - ஒரு கப்
மைதா - அரை கப்
சர்க்கரை - ண் கப்
வாழைப்பழம் - ஒன்று
எண்ணெய் - போதுமானது
செய்முறை :
ரவை, மைதா இரண்டையும் ஒன்று சேர்த்து பிசையவும். பிறகு வாழைப்பழம், சர்க்கரையுடன் போதுமான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும். பின்பு தண்ணீர் சேர்த்து தோசை மாவு போல் ஆக்கிக் கொள்ளவும். கரைத்த மாவை அப்படியே அரை மணி நேரம் வைத்துவிடவும். வாணலி யில் எண்ணெய் விட்டு அடுப்பிலேற்றி எண்ணெய் காய்ந்ததும் ஒரு கரண்டியால் மாவை எடுத்து எடுத்து எண்ணெயில் ஊற்றவும். புரட்டி புரட்டி வேகவிட்டு வெந்தானதும் எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய் அதிரசம்
தேவையான பொருட்கள் :
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
வெல்லத்தூள் - 2 கப்
பச்சரிசி மாவு - 3 கப்
எண்ணெய் - போதுமானது
உப்பு - போதுமானது
செய்முறை :
வெல்லத்தூளுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி பாகு காய்ச்சி பாகை அடுப்பில் வைத்தபடியே சுத்தம் செய்யவும். பிறகு தேங்காய் துருவலை பாகில் கொட்டிக் கிளறவும். பிறகு பச்சரிசி மாவையும் சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டிப்படாது கிளறவும். உப்பும் சேர்த்துக் கொள்ளவும். பிறகு அடுப்பைவிட்டு இறக்கி ஆறியதும் இதை உருண்டைகளாக உருட்டவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது கொதித்ததும் உருண்டைகளை அதிரசம்போல் கையால் தட்டி எண்ணெயில் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
மைசூர் பாக்
தேவையான பொருட்கள் :
கடலை மாவு - ஒரு கப்
நெய் - 2 கப்
சர்க்கரை - 2 கப்
செய்முறை :
இரண்டு கப் சர்க்கரையில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி பாகு காய்ச்சவும். சர்க்கரை பாகு தயாரானதும் அடுப்பைவிட்டு இறக்காமலேயே கடலை மாவை சிறிது சிறிதாகத் தூவி சர்க்கரைப் பாகுடன் நன்கு கலக்கும் விதத்தில் கிளற வேண்டும். கட்டிபடாது கவனித்துக்கொள்ள வேண்டும். நெய்யை முன்கூட்டியே கொதிக்கவைத்து தயாராக வைத்திருந்து அதையும் சிறிது சிறிதாக பாலோடு சேர்த்து கடலை மாவுடன் கிளற வேண்டும். எல்லாம் ஒன்று கலந்து பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டாத நிலை வந்ததும் ஒரு தட்டில் நெய் பூசி அதில் கொட்டி ஒரே மட்டமாகப் பரப்பித் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
முந்திரிப் பருப்பு பாக்
தேவையான பொருட்கள் :
முந்திரிப் பருப்பு - ஒரு கப்
நெய் - 1அரை கப்
சர்க்கரை - 2 கப்
செய்முறை :
முந்திரிப் பருப்பை உரலில் அல்லது மிக்சியில் போட்டு இடித்து பவுடராக்கிக் கொள்ள வேண்டும். இரண்டு கப் சர்க்கரையில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றிப் பாகு காய்ச்ச வேண்டும். முந்திரிப் பருப்பு பவுடருடன் போதுமான தண்ணீர் சேர்த்து தோசை மாவுபோல் கரைத்துக்கொள்ள வேண்டும். பாகு அடுப்பில் இருக்கும்போதே அதோடு இந்த முந்திரிப் பருப்புக் கரைசலை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டிபடாது கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பாதி வெந்ததும் நெய்யையும் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாத நிலை வந்ததும் தட்டில் நெய் பூசி அதில் கொட்டி சமமாக பரப்பி துண்டுகளாக வெட்டவும்.
ரவா கேக்
தேவையான பொருட்கள் :
வறுத்த ரவை - 3 கப்
சர்க்கரை - 1அரை கப்
பால் - ஒரு கப்
தயிர் - அரை கப்
நெய் - 2 தேக்கரண்டி
சமையல் சோடா - அரை தேக்கரண்டி
பைனாப்பிள் எசன்ஸ் - சில துளிகள்
முந்திரிப் பருப்பு - 10
உப்பு - போதுமானது
செய்முறை :
பாலில் சர்க்கரை மற்றும் நெய் கலக்கவும். பிறகு இதோடு வறுத்த ரவை சேர்க்கவும். பிறகு உப்பு, தயிர், எசன்ஸ், ஐந்து முந்திரிப்பருப்பு கலந்து நன்கு அடித்து அடித்து பிசையவும். பிறகு சமையல் சோடாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றி மீண்டும் நன்கு அடிக்கவும். நெய் பூசிய தட்டில் இந்த கலவையை துண்டு துண்டாக ஊற்றி ஒவ்வொரு துண்டின் மேலும் முந்திரிப் பருப்பு துண்டு ஒன்றை வைத்து பிரஷர் குக்கரில் இருபது நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த ரவா கேக் உடலுக்கு நல்லது.
பால் கேக்
தேவையான பொருட்கள் :
கன்டென்ஸ்டு மில்க் - ஒரு டின்
மைதா - 200 கிராம்
வெண்ணெய் - ஒரு கப்
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
தண்ணீர் - போதுமானது
செய்முறை :
மைதாவுடன் பேக்கிங் பவுடரைக் கலக்கவும். பிறகு அதை சல்லடையில் நன்கு சலித்துக் கொள்ளவும். கன்டென்ஸ்டு மில்க்கில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலக்கிக் கொள்ளவும். பிறகு அதை சிறிது சிறிதாக மைதாவில் சேர்த்துப் பிசையவும். நன்கு பிசைய அது போதுமான தாக இல்லாது போனால் போதிய தண்ணீர் தெளித்து பிசையவும். பிறகு வெண்ணெயை உருக்கி அதோடு சேர்த்துப் பிசையவும். அந்தக் கலவையை நன்கு அடித்து கேக் டின்னில் பட்டர் பேப்பர் வைத்து கலவையை உருட்டி வைத்து வேகவிட்டு எடுக்கவும்.
No comments:
Post a Comment